உலகம்

இன்னும் சில ஆண்டுகளில் உலகில் 70 சதவீதம் பேர் நகரங்களில் வசிப்பார்கள்: சவாலுக்கு தயாராகுமாறு சிங்கப்பூர் பிரதமர் அழைப்பு

எஸ்.சசிதரன்

இந்த நூற்றாண்டின் மத்தியில் உலகில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் நகரங்களில் வசிப்பார்கள். எனவே, அதற்கேற்ப சுகாதாரம், வீட்டு வசதி உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் அதிகரிப்பதற்கு உலக நாடுகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.

உலக மாநகரங்களில் நீடித்த வளர்ச்சி, சர்வதேச நீர் வாரம் மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் ஆகியவை தொடர்பான மூன்று மாநாடுகள் சிங்கப்பூரில் ஜூன் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள போக்குவரத்து, நீர்வள நிபுணர்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள் பங்கேற்று தங்களின் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இம்மாநாட்டிற்கு உலகெங்கிலும் உள்ள 32 முக்கிய பெருநகரங்களின் மேயர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். குடிநீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து மற்றும் வீட்டு வசதி ஆகிய துறைகளில் செயல்பட்டு வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர், மின்சாரத்துக்கு மானியம் இல்லை

மாநாட்டைத் தொடங்கி வைத்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பேசியதாவது: உலகெங்கும் நகர்மயமாதல் அதிகரித்து வருகிறது. இதேபோன்ற மாநாட்டை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தினோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் உலகெங்கும் 10 கோடி மக்கள், ஊரகப் பகுதிகளில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். இது சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையைப் போன்று 20 மடங்கு அதிகமாகும். நகர்ப்பகுதிகள், பொருளாதார மையங்களாகவும், திறமை மற்றும் புதுமைகளுக்கான மையங்களாகவும் மாறி வருகின்றன. அதேநேரத்தில், மாநகரங்களுக்குச் சவால்களும் பெருகி வருகின்றன. சுற்றுப்புறச் சீர்கேடு காரணமாக பருவநிலை மாறி, பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கெய்ரோவில் நிகழ்ந்த வரலாறு காணாத பனிப்பொழிவையும், லண்டன் சந்தித்த பெருவெள்ளத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். நகர மக்கள் வாழ்வதற்கு ஏற்ற, சுகாதாரமான, பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டியது அவசியம்.

சிங்கப்பூரை மக்கள் வாழ்வதற் கேற்ற நகரமாக தொடர்ந்து நீடிக்க வைக்க தேவையான திட்டங்களை எங்களால் இயன்றவரை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.

இங்கு, குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கு மானியம் அளிக்காமல், அவற்றின் அருமையை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக, கட்டணங்களை சற்று அதிகமாகவே நிர்ணயித்துள்ளோம்.

ஆனால், சிங்கப்பூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து நீண்டகால திட்டங்களை வகுத்து வருகிறோம். எதிர்கால சந்ததியினர் நலன் கருதி, சிங்கப்பூர் மக்களும் சில தியாகங்களை செய்து வருகின்றனர்.

எதிர்பார்ப்புகள் அதிகரிப்பு

தற்போது, இந்த மாநாடு நடைபெற்று வரும் பன்னடுக்கு மாடிகளைக் கொண்ட மெரினா பே பகுதி, ஒரு காலத்தில் மாசடைந்த நதியின் முகத்துவாரப் பகுதியாகவும், அதன் கரைகள் குடிசைவாசிகள் வாழும் அழுக்கான இடமாகவும் இருந்தது. ஆனால் இப்போது சிங்கப்பூர்வாசிகள் பெருமை கொள்ளத்தக்க இடமாக, மணிமகுடமாக மாறியுள்ளது. எங்களது சிறப்பான செயல்பாடுகளால், சர்வதேச அளவில் சிங்கப்பூர் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. எனினும் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. உலகின் பிற நகரங்களும் அசுரவேகத்தில் வளர்ச்சி பெற்று அனுதினமும் புதுப்புது மைல்கற்களை எட்டி வருகின்றன. அந்நகரங்களைப் பார்த்து நாங்களும் பல விஷயங்களைக் கற்று செயல்படுத்தி வருகிறோம். உதாரணத்துக்கு, லண்டனை போல் போக்குவரத்து வசதியையும், கோபன்ஹேகனை போல் பூங்காக்களையும் சிங்கப்பூரில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இப்போதைக்கு, குறைந்த விலையில் தரமான வீடுகளை அளிப்பது, சிறப்பான போக்குவரத்து வசதிகளைத் தருவது முக்கிய குறிக்கோளாக உள்ளது. இதுதவிர, சிங்கப்பூரில் குடியேறியுள்ள வெளிநாட்டினரை உள்ளூர் மக்களுடன் சுமுகமாக இணைந்து வாழச்செய்வது, அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது போன்றவற்றிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.

இரண்டாவதாக, தொழில் நுட்பத்தை, குறிப்பாக இன்டர் நெட்டுடன் இணைந்த வசதிகளை பொதுமக்கள் முடிந்தவரை சிறப்பாக உபயோகிக்கும் “ஸ்மார்ட் நாடாகவும்” மாற, உலகின் பல நாடுகளைப் பார்த்து, கற்று வருகிறோம். மேலும், சாப்ட்வேர் வசதிகளைக் கொண்டு, மின்துறையை சிறப்பாக நிர்வகிப்பது உள்பட பல்வேறு பணிகளை சிறப்பாக கையாண்டு வருகிறோம். மூன்றாவதாக, குடிமக்களை நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் பங்கெடுக்க வைத்து வருகிறோம். இந்நாட்டினை நீடித்த வளர்ச்சி கொண்டதாக மாற்ற குடிமக்களும் முழுமூச்சுடன் பங்களித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிங்கப்பூர் பிரதமர் கூறினார்.

அசத்திய அம்மா உணவகம்

சிங்கப்பூர் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற மேயர்கள் கூட்டத்தில், இந்தியாவில் இருந்து சென்னை மேயர் சைதை துரைசாமி மட்டுமே பங்கேற்றார். அதில் பேசிய அவர், “o.2 அமெரிக்க டாலர் இருந்தால், சென்னையில் அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் சாப்பிட்டு ஒரு நாள் பொழுதை பசியின்றி கழித்துவிடலாம்” என்றார்.

இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில் நியூயார்கில் நடைபெறவுள்ள மேயர்கள் மாநாட்டில் பங்கேற்கும்போது, அம்மா உணவகங்களைப் பற்றி விரிவாக விளக்க வேண்டும் என்று மாநாட்டில் பங்கேற்றவர்கள் கேட்டுக்கொண்டதாக மேயர் சைதை துரைசாமி சிங்கப்பூரில் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறினார்.

SCROLL FOR NEXT