உலகம்

சிரியா விவகாரத்தில் திடீர் திருப்பம்: அமெரிக்கா, ரஷ்யா ஆலோசனை

ஏபி

மாஸ்கோ சிரியா விவகாரத்தில் திடீர் திருப்பமாக அமெரிக்க, ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் மாஸ்கோவில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சிரியா நிலப்பரப்பில் 30 சதவீதம் மட்டுமே சிரியா அரசு வசம் உள்ளது. 70 சதவீத பகுதி ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் அதிபர் ஆசாத்தை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. அவரை பதவி விலகச் செய்ய அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் அங்கு முகாமிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சில மாதங்களாகப் போரிட்டு வருகிறது. அண்மையில் சிரியா எல்லையில் பறந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க கூட்டுப் படைகளில் துருக்கியும் ஓர் உறுப்பு நாடு ஆகும். இதனால் சிரியா போர்க்களத்தில் அமெரிக்கா, ரஷ்யா இடையே மோதல் வெடித்துள்ளது.

தற்போது சிரியா அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் முழுவதும் ரஷ்ய விமானப் படை போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எதிரிகளின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அரசு கட்டுப்பாட்டு பகுதியில் எந்த விமானம் பறந்தாலும் சுட்டு வீழ்த்துவோம் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பிரச்சினையில் திடீர் திருப்பமாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றார். அங்கு அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவை சந்தித்துப் பேசினார்.

இதன் பின் நிருபர்களிடம் ஜான் கெர்ரி கூறியதாவது:

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக் கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். எனினும் சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இருநாடுகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவே இரு நாடுகளும் போரிட்டு வருகின்றன.

எனவே சிரியா பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். விரைவில் நல்ல தீர்வு காணப்படும்.

கிழக்கு உக்ரைனில் நிலவும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் கூறியதாவது:

தீவிரவாதிகளில் நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என்ற பாகுபாடு இல்லை. உலகில் இருந்து தீவிரவாதம் வேரோடு அறுக்கப்பட வேண்டும். அமைச்சர் ஜான் கெர்ரியுடனான பேச்சு வார்த்தை பயனுள்ளதாக இருந்தது. அமெரிக்கா தொடர்பான ரஷ்ய வெளியுறவு கொள்கை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT