உலகம்

காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல்

செய்திப்பிரிவு

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஊடங்கள் தரப்பில், “காசா பகுதியில் போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. திங்கட்கிழமை முதலே இஸ்ரேல் ராணுவம் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 42 பேர் பலியாகினர்” என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புகளின் முகாம்களைக் குறிவைத்தே தாக்குதல் நடந்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன?

1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரமாக இருக்கும் என்று அந்நாடு அப்போது அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. ஆனால், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது.

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக யாஹ்யா அல் சின்வார் 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலஸ்தீனப் போராளிகளுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமான நபர்களைக் கொன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்றத்தில் யாஹ்யா அல் சின்வார் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

SCROLL FOR NEXT