இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கான தடையை ஜூன் 22ஆம் தேதி வரை கனடா நீட்டித்துள்ளது.
இதுகுறித்து கனடா விமானத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கனடா - இந்தியா இரு நாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்கான தடையை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, டோரண்டோ இடையே தினமும் விமானப் போக்குவரத்து செயல்பட்டு வந்தது. B.1.617 என்ற உருமாற்றம் அடைந்த கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் முதலே இந்தியா - கனடாவுக்கு இடையே விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் மாதம் முதலே, இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தம் நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. வங்கதேசமும் இந்தியாவுடனான எல்லையை மூடியுள்ளது.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.