விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றும் பணி, அமெரிக்க மாநிலங்களில் 6 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தில், கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் கிளேட்டன் லாக்கெட் என்பவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும்போது நடைபெற்ற குளறுபடி நாடு முழுவதும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
விஷ ஊசி போடப்பட்ட 10 நிமிடத்தில் கிளேட்டன் லாக்கெட் உயிரிழந்திருக்க வேண்டும். ஆனால் அவர் உயிரிழக்க 43 நிமிடங்கள் ஆனது. மேலும் அவர் வலியால் துடிதுடித்து இறந்தது, நாடு முழுவதும் கண்டனக் குரல்களை எழுப்பியது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இதை கண்டித்தார். இதையடுத்து மரண தண்டனை நிறைவேற்றும் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் 6 வாரங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் ஜார்ஜியா மற்றும் மிசவுரி மாநிலங்களில் தலா ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இருவருக்கும் மீண்டும் விஷ ஊசி மூலமே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனைக்குப் பயன்படுத்தப்படும் விஷ மருந்துக்கு அமெரிக்க மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இதனை அமெரிக்க மாநிலங்கள் பெற்றுவந்தன. ஆனால் அவர்கள் சப்ளையை நிறுத்தி விட்டதால், வேறு ஆதாரங்களை அமெரிக்க மாநிலங்கள் ஆராய்ந்து வருகின்றன. இதனால் 32 மாநிலங்களில் மரண தண்டனை நிறைவேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.