உலகம்

உருமாற்றம் அடைந்த இந்திய கரோனா வைரஸை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்: பிரிட்டன் பிரதமர்

செய்திப்பிரிவு

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை கூறும்போது, “ இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பிரிட்டனிலும் பரவத் தொடங்கியுள்ளது. அந்த வைரஸை கையாள்வதில் நாம் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். நாம் பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளோம். வீடு வீடாக சோதனை செய்யப்பட உள்ளது” என்றார்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட புதியவகை உருமாற்றம் அடைந்த வைரஸால், அங்கு தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்தை வேகமாக செலுத்தியதன் காரணமாக அங்கு கரோனா தொற்று 65% வரை குறைந்தது.

பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக 2,000க்கும் குறைவானவர்களே தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

உலக அளவில் கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்துவதில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், சிலி ஆகிய நாடுகள் முன்னிலை வகுத்து வருகின்றன.

உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT