மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா தங்களது திருமண உறவை முறித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். இல்லற வாழ்வில் இனி பிரிந்து பயணித்தாலும், மனிதாபிமான நடவடிக்கைகளில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பில் கேட்ஸ் - மெலிண்டா வெளியிட்ட கூட்டறிக்கையில், “கடந்த 27 ஆண்டுகளில் மூன்று சிறப்பான பிள்ளைகளை வளர்த்திருக்கிறோம். மேலும், எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் ஆரோக்கியமாக இருக்க வழி செய்திருக்கிறோம்.
தொண்டு நிறுவனம் சார்ந்து எங்களது பணிகளில் இணைந்து பயணிப்போம். ஆனால், இல்லற வாழ்வில் அடுத்த கட்டத்தில் இனி எங்களால் பயணிக்க முடியாது. புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
பில் கேட்ஸ், மெலிண்டா இருவரும் பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். இந்த அமைப்பு கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கும், மற்ற தடுப்பூசிப் பணிகளுக்கும் 1.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.