ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஸ்பெயின் தூதரகம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
காபூலின் ஷெர்பூர் பகுதி யில் ஸ்பெயின் தூதரகம் அமைந் துள்ளது. அங்கு நேற்றுமுன்தினம் இரவு காரில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி, ஸ்பெயின் தூதரக வாயிலில் மோதி வெடித்துச் சிதறி னான். அதேநேரத்தில் அப்பகுதியில் மறைந்திருந்த 3 தீவிரவாதிகள் ஸ்பெயின் தூதரகத்தை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். கையெறி குண்டுகளை வீசினர்.
சம்பவ இடத்துக்கு ஆப்கானிஸ் தான் போலீஸார், அமெரிக்க கூட்டுப் படையினர் விரைந்து வந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நேற்றிரவு தொடங்கிய சண்டை சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இறுதியில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் ஸ்பெயின் தூதரக பாதுகாவலர்கள் 2 பேர், ஆப்கானிஸ்தான் போலீஸார் 5 பேர், பாதசாரி ஒருவர் என 8 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளனர்.