இராக்கின் தல் அபார் நகரை சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இராக்கில் முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ராணுவ வீரர்கள் மீது ஐ.எஸ்.ஐ.எல். (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் தி லெவன்ட்) என்ற தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், பல இடங்களில் ராணுவ வீரர்கள் பின்வாங்கி வருகின்றனர்.
2 லட்சம் மக்கள் வசிக்கும் தல் அபார் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியிருப்பதாக அதன் மேயர் அப்துல்லா அப்துல் தெரிவித்துள்ளார். தலைநகர் பாக்தாத்தின் வடமேற்கே 420 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தல் அபாரில் வாகனங்களில் இயந்திரத் துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் சுதந்திரமாக ரோந்து செல்வதாக அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
தீவிரவாதிகளின் கைகளுக்கு நகரம் சென்றதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் பலர் அருகில் உள்ள நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே பாக்தாத்திலும் தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கியுள்ளனர். அங்கு நிகழ்ந்த குண்டு வீச்சில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இராக்கில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.