உலகம்

மூவர்ணங்களில் ஒளிரவுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி: கரோனாவுக்கு எதிராகப் போரிடும் இந்தியாவுக்கு ஆதரவு

செய்திப்பிரிவு

கரோனாவுக்கு எதிராகப் போரிடும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நயாகரா நீர்வீழ்ச்சி ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ணங்களில் ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,04,832 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றுக்கு எதிராகப் போரிடும் இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே கனடாவின் பிரபல சுற்றுலாத் தலமான நயாகரா நீர்வீழ்ச்சி மூவர்ணங்களில் ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நயாகரா பார்க்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ''கோவிட்-19 காரணமாக இந்தியா தற்போது ஏராளமான தொற்று எண்ணிக்கையைச் சந்தித்து வருகிறது. அதிக அளவிலான மக்களும் உயிரிழக்கின்றனர். இந்தியாவுக்கான ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், நயாகரா நீர்வீழ்ச்சி இன்று இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை இந்திய தேசக் கொடியின் வண்ணங்களான ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் ஒளிரும். #StayStrongIndia'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயாகரா நீர்வீழ்ச்சி மூவர்ணங்களில் ஒளிர்வது இது முதல் முறையல்ல. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணங்களால் ஒளிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT