உலகம்

வெள்ளை மேலாதிக்கம் ஓர் பயங்கரவாதம்: ஜோ பைடன்

செய்திப்பிரிவு

வெள்ளை மேலாதிக்கம் என்பது ஒரு பயங்கரவாதம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் கூறும்போது, “ வெள்ளை மேலாதிக்கம் என்பது ஒரு பயங்கரவாதம் ஆகும். வெள்ளை மேலாதிக்கம் இன்று நம் தாயகத்திற்கு மிகவும் ஆபத்தான பயங்கரவாதமாகவும், அச்சுறுத்தலாகவும் எங்கள் புலனாய்வு அமைப்புகள் தீர்மானித்துள்ளது. இதனை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். என் சக அமெரிக்கர்களே, பாருங்கள், இந்த தேசத்தின் ஆன்மாவை குணப்படுத்த நாம் ஒன்று சேர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஜார்ர்ஜ் பிளாய்ட் மரணத்துக்குப் பிறகு வெள்ளை மேலாதிக்கத்துகு எதிராக கருப்பினத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை செய்யப்பட்டார். பலரும் பார்க்கும் வண்ணம் காவலர்களாலேயே அந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டது.

வெள்ளை இன காவல் அதிகாரியான டெரக் சாவில் ஃப்ளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்னால் மூச்சுவிட முடியவில்லை என ஃப்ளாய்ட் திணறிக் கொண்டு பேசியது உலகம் முழுவதும் ஒலித்தது. இனவெறிக் கொலை என தெள்ளத்தெளிவாகத் தென்பட்ட அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

சரியாக 9 நிமிடங்கள் ஃப்ளாய்டின் கழுத்தில் தனது காலை வைத்து டெரக் சாவின் அழுத்தியது வீடியோவில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மின்னிபோலிஸ் நீதிமன்றம் இந்த பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT