உலகம்

இந்தியாவின் புதிய வகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு தகவல்

செய்திப்பிரிவு

இந்தியாவில் காணப்படும் புதியவகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ்பரவல் கடந்த சில நாட்களாக உச்சத்தில் உள்ளது. ஒரு நாள்கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3.5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த புயல்வேக வைரஸ் பரவலுக்கு இங்கு கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் (பி.1.67) காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் கரோனா தொற்று நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் வாராந்திர அறிக்கையில், “இந்தியாவில் முதலில் காணப்பட்ட பி.1.617 வகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இந்த வகை வைரஸ் அதிகம் காணப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

புதிய பி.1.167 வகை வைரஸை உலக சுகாதரா அமைப்பு அண்மையில் பட்டியலிட்டது. சற்று மாறுபட்ட பிறழ்வுகள் மற்றும் குணாதிசயங்களை இந்த வகை வைரஸ் கொண்டுள்ளதாக குறிப்பிட்டாலும் கொடூர மற்றும் தடுப்பூசி பாதுகாப்பை தகர்க்கக் கூடியதாக அறிவிக்கவில்லை.

இந்தியாவில் இப்போது புதிய நோயாளிகள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது பேரழிவை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் புதிதாக 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் உலகளாவிய நோயாளிகள் எண்ணிக்கை 14.77 கோடியாக அதிகரித்தது. உலகம் முழுவதும் 31 லட்சத்துக்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் கொன்றுள்ளது.

இந்தியாவில் காணப்படும் பிற வகை கரோனா வைரஸ்களை காட்டிலும் பி.1.167 வரை அதிக வளர்ச்சி விகிதம் கொண்டுள்ளது. இது வேகமாக பரவும் தன்மையை கொண்டது என உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவில் முதல் அலையை விட இரண்டாவது அலை வேகமாக பரவுவதை ஆய்வுகள் காட்டுகின்றன. இதற்கு, வைரஸின் தன்மை தவிர மக்களை அதிக அளவில் கூட அனுமதித்தது, பொது சுகாதார நடவடிக்கைகளில் தளர்வுபோன்ற பிற காரணிகளும் இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

பி.1.167 வகை கரோனா வைரஸ் மற்றும் பிற வகை கரோனாவைரஸ்கள் குறித்து கூடுதல் ஆய்வுகள் அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT