இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, இந்தியாவிலிருந்து பயணிகள் விமானங்கள் மே 15-ம் தேதி வரை வரத் தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி கோரத் தாண்டவமாடி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவில் பரவியுள்ள கரோனா வைரஸ் அதிக வீரியம் உடையதாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்ததையடுத்து, பல நாடுகள் இந்தியாவிலிருந்து பயணிகள் விமானத்துக்குத் தடை விதித்துள்ளன.
குறிப்பாக பிரிட்டன், நெதர்லாந்து, சவுதி அரேபியா, ஈரான், நியூஸிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசும் இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் வர மே 15-ம் தேதிவரை தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முதல்வர் அனாஸ்டாசியா பளாசுக், சமீபத்தில் அந்நாட்டுப் பிரதமர் ஸ்டாக் மோரிஸனுக்கு நேற்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதில், “இந்தியாவில் பரவி வரும் கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது. மிகுந்த வீரியம் கொண்டதாக இருக்கிறது. ஆதலால், இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தையும் தடை செய்யுங்கள். எங்களுடைய கோரிக்கைைய அரசு இன்றே பரிசீலிக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள பல மாநிலங்கள் எல்லைகளை மூட வலியுறுத்தியுள்ளன. இதையடுத்து, இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு மே 15-ம் தேதிவரை தடை விதித்து பிரதமர் ஸ்காட் மோரிஸன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முழுக் கவச உடைகள், மருந்துகள், ஆக்சிஜன் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆஸ்திேரலிய அரசு நிவாரணமாக வழங்க உள்ளது. அது தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பை ஆஸ்திரேலிய அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவுக்குள் அந்நாட்டு குடிமக்கள் வெளிநாடுகளில் இருந்து சென்றாலும், ஹோட்டலில் அவர்களின் சொந்தச் செலவில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதில் கரோனா இல்லை என நெகட்டிவ் சான்று பெற்றபின்புதான் நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தக் கடும் நடவடிக்கையால்தான் ஆஸ்திரேலியாவில் கரோனா கட்டுக்குள் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு தடை வரும் என முன்பே தெரிந்துதான் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஆண்ட்ரூ டை, ஆடம் ஸம்பா, கேன் ரிச்சார்ட்ஸன் ஆகியோர் நேற்று முன்தினமே ஆஸ்திேரலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.