உலகம்

சோதனை காலத்தில் இந்தியா எங்களுக்கு உதவியது; இப்போது நாங்கள் இந்தியாவுக்கு துணை நிற்போம்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன்

செய்திப்பிரிவு

அமெரிக்கா கரோனா பரவலால் சோதனையான காலகட்டத்தை எதிர்கொண்டபோது இந்தியா உதவியது. இந்தியா கரோனாவினால் கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நிச்சயமாக நாங்கள் அவர்களுக்குத் துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக திங்களன்று அமெரிக்க அதிபர்ஜோ பிடனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் உரையாடினர்.

இந்தியாவில் மிக மோசமான அளவில் கரோனா சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான உரையாடல் குறித்து அமெரிக்க அதிபர் பிடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இன்று நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அவசரகால உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா தவறாமல் செய்யும் என உறுதியளித்தேன். எங்களது நெருக்கடி காலத்தில் இந்தியா உதவியது. இப்போது நாங்கள் இந்தியாவுக்கு துணை நிற்போம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பிடன் இடையேயான தொலைபேசி உரையாடல் 45 நிமிடங்கள் தொடர்ந்ததாகத் தெரிகிறது. அமெரிக்காவின் 46வது அதிபராக பிடன் பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக அவர் மோடியுடன் பேசியுள்ளார்.

இரு தலைவர்களின் தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் பெஸ்கி கூறுகையில், "இந்தியாவின் வேண்டுகோளினை ஏற்று அமெரிக்கா ஆக்சிஜன் தயாரிப்பு உபகரணங்கள், பிபிஇ கவச உடைகள், தடுப்பூசி மூல மருந்துகள் ஆகியனவற்றைத் தரவிருக்கிறது. ரெம்டெசிவிர், பேவிப்ரிவிர், டோசிலிஜூமாப் போன்ற மருந்துகளையும் இந்தியா கோரியுள்ளது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியுடன் புதிதாக சில மருத்துவ உபகரணங்களையும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்கா வழங்கவுள்ளது.

உலகம் முழுவதுமே எங்கெல்லாம் கரோனா நெருக்கடி ஏற்பட்டதோ அங்கெல்லாம் அமெரிக்கா தன்னால் இயன்ற உதவியைச் செய்திருக்கிறது " என்றார்.

SCROLL FOR NEXT