கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நதெள்ள | கோப்புப்படம் 
உலகம்

‘எங்கள் இதயம் நொறுங்கியது’: கரோனா பாதிப்பில் சிக்கிய இந்தியாவுக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளா ஆதரவு

பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலையால் தீவிரமடைந்துள்ளதைக் கண்ட கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெள்ளா ஆகியோர் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து, உறுதியாக இந்தியாவுக்கு உதவுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 3.52லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், 2,812 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் பல்வேறு நகரங்களிலும் கரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான ஆக்சிஜன், படுக்கை வசதிகள், மருந்துகள் கிடைக்காமல் அல்லல்படுவதையும், அல்லாடுவதையும் உலக நாடுகள் பார்த்து வருகின்றனர். பாகிஸ்தான், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து, உதவுவதாக உறுதி தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்தியாவைச் சேர்ந்தவும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவில் கரோனா சிக்கல் மோசமடைந்து வருவதைப் பார்க்கும் போது பேரழிவாக இருக்கிறது. கூகுள் மற்றும் கூகுள் ஊழியர்கள் ரூ.135 கோடி நிதியை இந்தியாவுக்கு யுனிசெஃப் மூலம் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க வழங்கப்பட்டுள்ளது. இடர்பாடுகளில் இருக்கும் மக்களுக்கு கூகுள் நிர்வாகம் உதவி செய்யும், கரோனா வைரஸ் குறித்த முக்கியமானத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சத்யா நாதெள்ளா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவில் தற்போதுள்ள சூழலைப் பார்த்து என் இதயம் நொறுங்கிவிட்டது. இந்தியாவுக்கு உதவி செய்யும் அமெரிக்க அரசுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொடர்ந்து தனது தொழிலநுட்பங்கள், ஆதரவு, வளங்கள் ஆகியவற்றை மக்களை குணப்படுத்துவதற்கு வழங்கும். மக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கருவிகளை வாங்கவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் இந்தியாவுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளனர். குறிப்பாக அவசரமாகத் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் போன்றவற்றை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதற்கிடையே சவுதி அரேபியா சார்பில் 80 மெட்ரிக் டன் திரவ எரிபொருளை இந்தியாவுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் கவுன்சிலும் இந்தியாவுக்கு இந்த கடினமான நேரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸஸ் மைக்கேல் ட்விட்டரில் கூறுகையில் “ கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் இந்திய மக்களுக்கு ஐரோப்பிய கவுன்சில் துணை நிற்கும். இந்தியாவுக்கு செய்ய கூடிய உதவிகள், ஆதரவு குறித்து விரைவில் ஆலோசித்து அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT