இரண்டாவது அலை காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்குமருத்துவ நிவாரணங்களை அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், வெண்டிலேட்டர், Bi PAP, டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள், PPE பொருட்களை இந்தியாவுக்கு வழங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ இந்த உலகத்திலும், அண்டை நாட்டிலும் கரோனா வைரஸால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்கள் விரைந்து குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்வோம்.
இந்த கரோனா வைரஸுக்கு எதிரான ஆபத்தான போரில் ஈடுபட்டுள்ள, இந்தக் கடினமான நேரத்தில் இந்திய மக்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
உலக அளவில் சவாலாக இருந்துவரும் இந்த கரோனா வைரஸுக்கு எதிராக மனித சமுதாயம் ஒன்றாக இணைந்து போரிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்தியா மார்ச் மாதம் இறுதி முதலே கரோனாவின் இரண்டாம் அலையினால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கரோனா பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்து வருகிறது. 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இருக்க வேண்டும் என ட்விட்டரில் பாகிஸ்தான் மக்கள் டிரெண்ட் செய்தனர்.