நேபாளத்தில் செங்கல் சூளை வெடித்ததில், அதன் புகை போக்கி சரிந்து விழுந்து 6 இந்தியர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 6 இந்தியர்களில் 4 பேர் சிறுவர்கள்.
நியூ ஜெயா நேபாள் செங்கல் சூளையில் நேற்று முன்தினம் இந்த விபத்து நடந்தது. சம்பவத்தின்போது, 10 லட்சம் செங்கற்களை வேக வைக்கும் பணி நடந்தது. அப்போது திடீரென சூளை வெடித்ததில், 105 அடி உயரமுள்ள சூளையின் புகைபோக்கி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சதாம் ஹுசைன் (16), ராகுல் மியா (12), சலிம் மியா (16), பிஹாரைச் சேர்ந்த முஸ்தப் மியா (16), கரீப்லால் பஸ்வான் (50), மிதிலேஷ் பஸ்வான் (25) மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
மேலும் 25 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.