ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் உடல்நிலை மோசமடைய ரஷ்ய அதிகாரிகளே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, “உடனடியாக அலெக்ஸி நவால்னிக்கு தேவைப்படக் கூடிய மருத்துவ வசதிகளை அளியுங்கள். சிறை மருத்துவத்தைத் தவிர்த்து வெளியிலிருந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க அரசு உதவ வேண்டும். அலெக்ஸி நவால்னியின் உடல்நிலை மோசமடைந்ததற்கு ரஷ்ய அதிகாரிகளே காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அலெக்ஸி நவால்னியின் உடல் நிலைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு அவர் மரணித்தால் அதற்கான விளைவுகளை ரஷ்யா சந்திக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நடந்தது என்ன?
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.
ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது
இந்த நிலையில் சிகிச்சைக்குப் பின் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யா முழுவதும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனது கைதை எதிர்த்து நவால்னி கடந்த சில நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.