கரோனா தொற்றை தடுக்க உதவும் தடுப்பூசிகளின் கையிருப்பில் உலக நாடுகள் இடையே ஏற்றத்தாழ்வு நிலவுவதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் அவற்றை வல்லரசு நாடுகள் போட்டி போட்டு வாங்கியுள்ளன.
அந்த வகையில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகள் அதிகப்படியாக கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கி உள்ளன. இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சம நிலையின்மை நிலவுவதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரெட்டா துன்பெர்க் கூறும்போது, “ தடுப்பூசி ஏற்றத்தாழ்வைக் குறைக்க சர்வதேச சமூகங்களின் பங்களிப்பு தேவை. காலநிலை நெருக்கடிகளைக் கையாள்வதைப் போல முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்.
கரோனா தடுப்பூசிகள் பெறுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. பணக்கார நாடுகள் அதிகப்படியான தடுப்பூசிகள் வைத்துள்ளன. ஏழை நாடுகளிடம் தடுப்பூசிகள் இல்லை.
கரோனா தடுப்பூசிகள் 48% பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கு வழக்கப்பட்டுள்ளன. 0.1 % மட்டுமே குறைந்த வருமானம் உடைய நாடுகளுக்கு வழக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.