உலகம்

அஜ்மல் கசாப் உயிருடன் உள்ளார்: பாக். நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியம்

பிடிஐ

மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப் உயிருடன் இருப்ப தாக, பாகிஸ்தான் நீதிமன்றத்தில் முக்கிய சாட்சி பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தாக்குதல் சம்பவத்தின்போது உயிருடன் பிடிபட்டு பின்னர் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் பரித்கோட்டில் உள்ள பள்ளியில் மூன்றாண்டுகள் படித்துள்ளார்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முடாசிர் லக்வி வழக்கின் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட் டுள்ளார்.

நேற்று முன்தினம் ராவல்பிண்டி அடியாலாவிலுள்ளா தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தலைமை ஆசிரியர் முடாசிர் லக்வி, “அஜ்மல் கசாப் உயிருடன் இருப்பதாகக் கூறினார். கசாப் பள்ளியில் படித்ததற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அரசுத்தரப்பில் அவரை முறை யாக குறுக்கு விசாரணை செய்யவில்லை” என நீதிமன்ற ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜகியுர் ரஹ்மான் லக்வியின் சொந்த ஊரைச் சேர்ந்த வர் தலைமையாசிரியர் முடாசிர். எனவே, ஜகியுர் ரஹ்மானால் முடாசிர் நெருக்கடிக்கு ஆளாகி யிருக்க வாய்ப்புள்ளது.

பிறழ் சாட்சியமாக முடாசிர் மாறிவிட்டதை அடுத்து அவரைக் குறுக்கு விசராணை செய்ய அரசு தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட கசாப்தான், தன்னிடம் படித்தவரா என்ற விவரத்தை முடாசிர் தெரிவிக்கவில்லை. வழக்கு விசாரணை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2008 மும்பை தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் உயிருடன் பிடிபட்ட கசாப், 2012-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

முன்னதாக, கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் இல்லை என அந்நாட்டு அரசு மறுத்தது. இத்தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஜகியுர் ரஹ்மான் லக்வி, அப்துல் வஜித், மசார் இக்பால், சாதிக், சாஹித் ஜமில், ஜமில் அகமது, யூனுஸ் அஞ்சும் ஆகியோர் மீது 2009-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள லக்வி, ரகசியமான இடத்தில் தங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT