மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ''மியான்மரின் மண்டாலே நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறது.
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 700க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.