உலகம்

நாடாளுமன்றத்தில் ஜனவரி 9-ல் தீர்மானம்: அதிபரின் நேரடி ஆட்சி முறையை ரத்து செய்ய இலங்கை முடிவு- பிரதமருக்கு அதிக அதிகாரம் கிடைக்கும்

பிடிஐ

அதிபரின் நேரடி ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற் கான தீர்மானம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.

இதன்படி இப்போதைய நாடாளு மன்றம் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையாக மாற்றப்படும். இது புதிய அரசமைப்புச்சட்ட வரைவை உருவாக்கும் பணியை தொடங்குவதுடன், அதிபர் ஆட்சி நடைமுறையை ரத்து செய்திடவும் நடவடிக்கை எடுக்கும். இதன்மூலம் இந்தியாவைப் போல பிரதமருக்கு அதிக அதிகாரம் கிடைக்கும். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ஜனவரி 9-ம் தேதி தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறியதாவது:

வரும் 2016 ஜனவரி 8-ம் தேதியுடன் மைத்ரிபால சிறிசேனா இலங்கை அதிபராக பொறுப் பேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு 9-ம் தேதி நாடாளு மன்றத்தில் சிறிசேனா உரையாற்ற உள்ளார்.

அதே நாளில், அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையாக நாடாளு மன்றத்தை மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். வரும் புத்தாண்டுக்கான நாடாளு மன்ற அலுவல்கள் பற்றிய பதிவேட்டில் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிர்ணய சபையானது, புதிய அரசியல் அமைப்புச் சட்ட வரைவை உருவாக்குவது பற்றி பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்கும். இப்போதுள்ள அரசியல் அமைப்பு சட்டம் கடந்த 1978-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

அதிபர் ஆட்சி முறைக்கு முடிவு கட்டவும், புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்யவும், தமிழர் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு காணவும் இந்த புதிய அரசியலமைப்புச் சட்டம் வகை செய்யும்.

கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போதே, தான் அதிபரானால் அதிபர் ஆட்சி முறைக்கு முடிவு கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

SCROLL FOR NEXT