உணவுச் சந்தைகளில் உயிருள்ள, வனங்களைச் சேர்ந்த பாலூட்டிகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் புதிய வகை நோய்கள் பரவுவதைத் தடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் இரண்டாம், மூன்றாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் தொற்றுப் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் உணவுச் சந்தைகளில் பாலூட்டிகள் விற்பனை குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் உணவுத் தேவையைப் பாரம்பரிய உணவுச் சந்தைகளே பூர்த்தி செய்கின்றன. எனினும் உலகத்தையே புரட்டிப் போட்ட கோவிட்-19 வைரஸ், முதன்முதலில் சீன நாட்டின் வூஹான் மாகாணத்தில் உள்ள பாரம்பரியமான மொத்த உணவுச் சந்தையில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கரோனா வைரஸின் ஆரம்பக்கட்ட நோயாளிகளாக, வூஹான் சந்தையில் உள்ள கடைகளின் முதலாளிகள், சந்தை ஊழியர்கள் மற்றும் கடைகளுக்கு அடிக்கடி செல்லும் வாடிக்கையாளர்களே இருந்தார்கள்.
விலங்குகள் குறிப்பாக வன உயிரிகள்தான், மனிதர்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் 70 சதவீதத்துக்கு மேற்பட்ட தொற்றுகளுக்கான காரணிகளாக இருக்கின்றன. குறிப்பாக வனப் பாலூட்டிகள் புதிய நோய்கள் தோன்றுவதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
இதனால் உயிருள்ள விலங்குகளைக் கொண்டு வந்து, தோலை உரித்து விற்பனை செய்யும் பாரம்பரிய உணவுச் சந்தைகள், தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நோய்க் கிருமி பரவுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. இந்நிலையில், வனங்களைச் சேர்ந்த உயிருள்ள பாலூட்டிகளைப் பிடித்து உணவுச் சந்தைகளில் விற்பதை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்."
இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளது.