டேவிட் மல்பாஸ் 
உலகம்

கரோனா தடுப்பூசி தயாரிப்பில் முக்கிய பங்கு- உலக வங்கி தலைவர் இந்தியாவுக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

உலக அளவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா பெரும்பங்கு வகிப்பதாக உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று வாஷிங்டனில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டத்துக்கு முன்னதாக உலக வங்கியின்தலைவர் டேவிட் மல்பாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலக அளவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா பெரும்பங்கு வகிப்பது பாராட்டுக்குரியது. இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கிறேன். கரோனா தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, தென்னாப்ரிக்கா, இந்தியா ஆகியவற்றில் உள்நாட்டு தயாரிப்புகள் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய எந்த அளவுக்கு தேவை என்பது தெரியவில்லை.

எனினும், இந்தியா உள்நாட்டில் தடுப்பூசி திட்டத்தை அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது. இது தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கரோனா தடுப்பூசி திட்டத்தை அதிகரித்து மக்களுக்கு அதிக அளவில் விரைவாக தடுப்பூசி செலுத்துவது உலகின் முதல்முன்னுரிமையாகும். கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு டேவிட் மல்பாஸ் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியா முழுவதும் இதுவரை 7 கோடியே 6 லட்சத்து 18 ஆயிரத்து 26 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT