உலகம்

போப்பாண்டவர் கூட்டுப் பிரார்த்தனையில் இஸ்ரேல், பாலஸ்தீன அதிபர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

போப்பாண்டவர் பிரான்சிஸ் நடத்திய சிறப்பு கூட்டுப் பிரார்த் தனையில் இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்றனர்.

பெரஸும் அப்பாஸும் போப் பாண்டவர் பிரான்சிஸை அவரது இல்ல வளாகத்தில் சந்தித்தனர். அங்கு இஸ்ரேல், பாலஸ் தீனத்தின் அமைதிக்காக கிறிஸ்தவ, யூத, முஸ்லிம் மத சம்பிரதாயங்களின்படி கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, அரபி மொழிகளில் நடந்த இந்தப் பிரார்த்தனை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. பின்னர் போப்பாண்டவர் பிரான்சிஸ், பெரஸ், அப்பாஸ், பார்த்தோலோமெவ் ஆகியோர் இணைந்து வாடிகன் தோட்டத்தில் அமைதியின் சின்னமான ஆலிவ் மரக் கன்றை நட்டனர்.

இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ் இது ஒரு வித்தியாசமான அமைதி முயற்சி என்று குறிப்பிட்டார்.

பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் கூறியபோது, போப்பின் அழைப்பு மிகவும் துணிச்சலானது, இந்த கூட்டுப் பிரார்த்தனை மூலம் அமைதிக்கு அழிவில்லை என்பதை உலகுக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்றார்.

கடந்த மாதம் மத்திய கிழக்கு ஆசியாவுக்குச் சென்ற போப் பாண்டவர் பிரான்சிஸ், கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்க வருமாறு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இரு தரப்பு தலைவர்களும் வாடிகன் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT