ஆஸ்திரேலியாவில் சிட்னி புறநகர்ப் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இந்திய சாப்ட்வேர் இன்ஜினீயர் பிரபாவுக்கு அங்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரைச் சேர்ந்த பிரபா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 7-ம் தேதி அவர் பணி முடிந்து இரவில் சிட்னி புறநகர்ப் பகுதியான வெஸ்ட்மேட் பகுதியில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
பாராமட்டா ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட சிட்னி புறநகரான வெஸ்ட்மேட் பகுதி பூங்காவில் கடந்த 22-ம் தேதி அவருக்கு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. அந்த பூங்காவில் பிரபாவின் நினைவாக ஒரு நாற்காலி அமைக்கப்பட்டு அதில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னத்தை பிரபாவின் 11 வயது மகள் மேக்னா திறந்துவைத்தார். அப்போது பிரபாவின் கணவர் நிருபர்களிடம் கூறியபோது, எனது மனைவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க ஆஸ்திரேலிய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.