முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இந்தியாவில் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாதன் மீது எந்தவொரு குற்றவழக்குகளும் இல்லை என இலங்கை நீதிமன்றத்தில், அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் குமரன் பத்மநாதன் என்கிற கே.பி. விடுதலைப் புலிகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்வது இவரது முக்கிய பணியாக இருந்தது. ராஜீவ் காந்தி படுகொலை சதியிலும் முக்கிய பங்காற்றியதால், இன்டர்போல் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்தியாவிலும் இவர் தேடப்பட்டு வருகிறார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரின் போது, அதன் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டார். அதன் பின் மலேசியாவில் இருந்தபடி விடுதலைப் புலிகளின் தலைவராக செயல்பட்ட குமரன் பத்மநாதனை, இலங்கை அரசு கைது செய்து கொழும்புவுக்கு அழைத்து வந்தது. அவரிடம் இருந்து விடுதலைப் புலிகள் தொடர்பான ரகசியங்களை தெரிந்த கொண்டதும், அப்போதைய ராஜபக்சே அரசு பத்ம நாதனை வீட்டுக் காவலில் வைத்தது. மேலும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்தது. எனினும் ஆதரவற்றோர் இல்லம் நடத்திக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அரசுக்கும் பத்மநாதனுக்கு உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக மக்கள் சுதந்திர அமைப்பு குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயந்தா ஜெயசூர்யா ஆஜரானார். அவர் தாக்கல் செய்த பதில் அறிக்கையில் பத்மநாதனுக்கு எந்த குற்றச் செயல்களிலும் பங்கு இல்லை என்றும், எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த பதில் ஏற்கும்படியாக இருந்தாலும், பத்மநாதன் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதால், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விதிக் கப்பட்ட தடை வரும் பிப்ரவரி மாதம் வரை நீடிக் கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.