பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற யூசப்சாய் மலாலா, தான் ஒரு பெண்ணியவாதி என்று அறிவித்துக் கொள்ள, நடிகை எம்மா வாட்சன் காரணம் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஐநா-வில் உலகத் தலைவர்கள் முன்பு எம்மா வாட்சன் ஆற்றிய உரை தன் மனதை மாற்றியதாக யூசப்சாய் மலாலா தெரிவித்தார்.
மலாலா தன்னைப் பற்றிய ஆவணப்படத் திரையிடல் ஒன்றில் கலந்து கொள்ள லண்டன் வந்த போது எம்மா வாட்சனிடம் இவ்வாறு தெரிவித்தார்.
“பெண்ணியவாதி என்பது ஒரு சிக்கலான வார்த்தை. நான் முதன்முதலில் இந்த வார்த்தையை கேட்ட போது எதிர்மறைக் கருத்துகள் எழுந்தன. சில நேர்மறைக் கருத்துகளும் எழுந்தன. எனவே நான் ஒரு பெண்ணியவாதியா இல்லையா என்பதைக் கூற தயக்கம் ஏற்பட்டது.
அதன் பிறகு உங்கள் (நடிகை எம்மா வாட்சன்) பேச்சைக் கேட்ட பிறகு பெண்ணியவாதி என்று என்னை அழைத்துக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதை அறிந்து கொண்டேன். எனவே, நான் ஒரு பெண்ணியவாதி, நாம் அனைவரும் பெண்ணியவாதியாக இருப்பது அவசியம், ஏனெனில் பெண்ணியவாதம் என்பது சமத்துவம் என்பதற்கு மற்றொரு வார்த்தை” என்று கூறியுள்ளார்.
எம்மா வாட்சன் பெண்களுக்கான ஐ.நா. நல்லெண்ணத் தூதராவார். மலாலா இவ்வாறு கூறியது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய எம்மா வாட்சன், “பெண்ணியவாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதற்கு அவ்வளவு சுலபமான வார்த்தை அல்ல, ஆனால் மலாலா தைரியமாக அதனை தெரிவித்துள்ளார். இந்த நாளில் எனக்கு நெகிழ்ச்சி அளிக்கும் தருணம் இது” என்றார்.