சிரியாவில் அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனங்களை ரஷ்ய ராணுவம் நிறுவியுள்ளது.
சிரியா மற்றும் இராக்கின் பெரும் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத்தை அமெரிக்கா ஆதரிக்கவில்லை.
இந்தப் பின்னணியில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் சிரியாவில் கடந்த 2 மாதங் களாக முகாமிட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சிப் படைகளை குறித்து ரஷ்ய விமானப் படை வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனங்களையும் சிரியாவில் ரஷ்ய ராணுவம் நிறுவி யுள்ளது. சிரியாவின் கடற்கரை நகரான லடாகியா விமான தளத்தில் இவை நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணை தடுப்பு சாதனம் மூலம் 90 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தையும் சுட்டு வீழ்த்த முடியும். மேலும் துருக்கி, சைப்ரஸ், மத்தியதரைகடல் நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றின் வான்பரப்பையும் கண்காணிக்க முடியும்.
சிரியாவில் அதிபர் ஆசாத் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியை குறிவைத்து பாயும் ஏவுகணைகளை எளிதாக தடுத்து அழிக்க முடியும். அந்தப் பகுதியில் பறக்கும் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த அதிநவீன போர் விமானங்களைகூட சுட்டு வீழ்த்த முடியும்.
கடந்த இரு நாட்களில் அலெப்போ, டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதி, ஹமா ஆகிய பகுதிகளில் சுமார் 277 தீவிரவாத முகாம்களை குறிவைத்து ரஷ்ய போர் விமா னங்கள் தாக்குதல் நடத்தி யுள்ளன.
சிரியா விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஷகரோவா கூறியதாவது: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கொடிய ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றது. அந்த அமைப்பை அழிக்க ரஷ்யா தீவிரமாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இராக்கில் அணுஆயுதம் இருப்ப தாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அமெரிக்காவின் நடவடிக்கையால் தான் உலகில் குழப்பங்கள் நேரிடு கின்றன. பல்வேறு நாடுகளில் சட்டவிரோதமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.