சிங்கப்பூரில் அதிகரித்து வரும் புறாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், சோதனை முயற்சியாக தீவனத் துடன் கருத்தடை மாத்திரைகளை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது.
சிங்கப்பூர் வேளாண்-உணவு மற்றும் விலங்குகள் ஆணையம் (ஏவிஏ) சார்பில், பால்மர் சாலையில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த சோதனை முடிய ஓராண்டாகும். இதன்படி, சோளத்தை அடிப்படையாகக் கொண்ட தீவனத்துடன் நைகார்பைசன் என்ற மருந்து கலந்து புறாக்களுக்கு வழங்கப்படும்.
இந்த மருந்தை பெண் புறாக்கள் சாப்பிடும்போது அவற்றுக்கு முட்டை உற்பத்தியாவது தடைபடும். அப்படியே முட்டையிட்டாலும் அவை குஞ்சு பொறிக்காது. அதேநேரம் இந்த மாத்திரை கலக்கப்பட்ட உணவை தவறுதலாக பிற விலங்குகளோ மனிதர்களோ சாப்பிட்டால் எந்த விளைவும் ஏற்படாது என்று ஏவிஏ தெரிவித்துள் ளது.
இந்த சோதனை வெற்றி அடைந்தால் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என் ஏவிஏ தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் பால்மர் சாலையில் சமீப காலமாக புறாக்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு 200 ஆக இருந்த இதன் எண்ணிக்கை இப்போது 400 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் புறாக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதே இனப்பெருக்கம் அதிகரிப்பதற்குக் காரணமாக விளங்குகிறது. எனவே, உணவு வழங்குவோர் மீது ஏவிஏ நடவடிக்கை எடுத்து வருகிறது.