இம்ரான்கான் முதல் டோஸ் தடுப்பூசியை மட்டுமே கடந்த இரு நாட்களுக்கு முன் செலுத்தினார். 2 நாட்களில் எந்தத் தடுப்பூசியும் விரைவாகச் செயல்பட முடியாது என்று பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமரின் சிறப்பு உதவியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமைதான் சீனா தயாரித்த கரோனா தடுப்பூசியை பிரதமர் இம்ரான்கான் செலுத்திக் கொண்ட நிலையில், 2 நாட்களில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
68 வயதாகும் இம்ரான்கான் அடிக்கடி கூட்டங்கள், அலுவலக ரீதியான சந்திப்புகளில் அதிகாரிகளுடன் பங்கேற்று வந்தார். சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கான் முகக்கவசம் இன்றி பங்கேற்றார். புதிய வீட்டுவசதித் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பிரதமர் இம்ரான்கான் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். தற்போது சீனா உருவாக்கிய சினோஃபார்ம் தடுப்பூசி சீனாவைத் தவிர்த்து பாகிஸ்தானுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் இம்ரான்கானின் தனிச்சிறப்பு உதவியாளர் ஃபைஸல் சுல்தான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பிரதமர் இம்ரான்கான் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை 6.15 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,700 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஆசாத் உமர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதிகமான உயிரிழப்பை உருவாக்கக் கூடியது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன, மக்கள் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாவிட்டால், கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும்” எனச் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவை வெளியிட்ட அறிவிப்பில், “பிரதமர் இம்ரான்கான் முதல் டோஸ் தடுப்பூசியை மட்டுமே கடந்த இரு நாட்களுக்கு முன் செலுத்தினார். 2 நாட்களில் எந்தத் தடுப்பூசியும் விரைவாகச் செயல்பட முடியாது. 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியபின், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக 2 முதல் 3 வாரங்கள் தேவைப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
இம்ரான்கானின் அரசியல் தொடர்பு உதவியாளர் ஷாபாஸ் கில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பிரதமருக்கு கரோனா அறிகுறிகள் தீவிரமாக இல்லை. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அறிகுறிகள் வீரியமாக இல்லாமல் செய்ததற்கு இறைவனுக்கு நன்றி. லேசான இருமல், காய்ச்சல் மட்டுமே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சீனா அரசு தயாரித்த சினோஃபார்ம் தடுப்பூசிகளில் 5 லட்சம் டோஸ் மருந்துகள் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.