கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவுக்கு கரோனா தடுப்பூசியை நன்கொடையாக அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெயில் நன்றி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸுக்கு எதிராகக் கண்டுபிடித்த கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய தடுப்பு மருந்துகளைச் சிறிய நாடுகளுக்கு அனுப்பி வைத்து இந்தியா உதவி செய்து வருகிறது. ஏறக்குறைய 90 நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை இலவசமாகவும், வர்த்தக ரீதியிலும் இந்தியா அனுப்பி வைத்து வருகிறது.
பிரதமர் மோடியின் இந்தச் செயலுக்கு ஐ.நா.வும், உலக சுகாதார அமைப்பும் பாராட்டு தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியின் செயலை உலகில் உள்ள மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரீபியன் தீவுகளில் உள்ள ஜமைக்கா, பர்படாஸ், ஆன்டிகுவா ஆகிய நாடுகளுக்கும் இந்திய அரசு கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைத்துள்ளது. இந்தியா அனுப்பி வைத்த கரோனா தடுப்பு மருந்து, ஜமைக்காவுக்கு கடந்த வாரம் சென்று சேர்ந்தது. இதை அனுப்பி வைத்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெயில் நன்றி தெரிவித்துள்ளார்.
கிறிஸ் கெயில் வெளியிட்ட வீடியோவில், "மரியாதைக்குரிய பிரதமர் மோடி, இந்திய மக்களே, ஜமைக்கா நாட்டுக்கு நன்கொடையாக கரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் உதவியை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். உங்கள் உதவிக்கு மிகப்பெரிய நன்றி. இந்தியா வரும்போது நிச்சயம் பிரதமர் மோடியைச் சந்திப்பேன். மீண்டும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே மே.இ.தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸலும் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடிக்கு கரோனா தடுப்பூசி அனுப்பியதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
ஜமைக்கா அரசு சார்பில் பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்நெஸ் வெளியிட்ட அறிவிப்பில், " இந்திய அரசு எங்களுக்கு அனுப்பிய 50 ஆயிரம் அஸ்ட்ராஜெனிகா கரோனா தடுப்பு மருந்துகளை நாங்கள் பெற்றுக்கொண்டோம். இந்திய அரசு செய்த உதவிக்கும், மக்களுக்கும் எங்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம், இந்த நேரத்தில் இந்த உதவி மிகவும் அவசியமானது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மே.இ.தீவுகள் முன்னாள் வீரர்கள் விவியன் ரிச்சார்ட்ஸ், ரிச்சி ரிச்சார்ட்ஸன், ஜிம்மி ஆடம்ஸ், நாம்நரேஷ் சர்வான் ஆகியோர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து் ட்வீட் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.