பாகிஸ்தானோடு இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
மோடியின் பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வந்திருந்த நவாஸ் கடந்த மே 27-ம் தேதி அவரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் ஜூன் 2-ம் தேதி மோடிக்கு நவாஸ் அனுப்பிய கடிதத்தில் டெல்லி சந்திப்பு திருப்திகரமாக இருந்தது, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது, இதுதொடர்பாக இந்தியாவோடு இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதில் அளித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நவாஸ் ஷெரீபுக்கு கடிதம் எழுதி யுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அண்மையில் கராச்சி நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதிகளின் செயல் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது. அந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பதவியேற்பு விழாவில் பங்கேற்றதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி சந்திப்பு எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. உங்களோடும் (நவாஸ்) உங்கள் அரசோடும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். இருநாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க வன்முறையை வேரறுத்து அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
அமைதி, நட்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய பாகிஸ்தான் உறவு அமைய வேண்டும். அப்போதுதான் இருநாடுகளின் மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமையும். நமது பிராந்தியம் வேகமாக வளர்ச்சி அடையும் என்று அவர் கூறியுள்ளார்.
நவாஸ் ஷெரீபின் டெல்லி பயணத்தின்போது அவரது தாயாருக்கு மோடி சால்வையை பரிசாக கொடுத்து அனுப்பினார். அதற்குப் பதிலாக மோடியின் தாயாருக்கு நவாஸ் ஷெரீப் சேலையை பரிசாக அனுப்பிவைத்தார். நவாஸின் பரிசுக்கு தனது கடிதத்தில் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.