பிரேசிலில் கடந்த சில நாட்களாவே கரோனாவினால் ஏற்படும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,972 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,972 பேர் கரோனாவுக்கு பலியாக, இதுவரை 2,68,370 பேர் நாடு முழுவதும் கரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 2 வாரங்களாகவே பிரேசிலில் கரோனா பலி அதிகரித்து வருகிறது ” என்று தெரிவித்துள்ளது.
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.
முன்னதாக, பிரேசிலில் கரோனாவுக்கான பலி அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வந்தன.
இதற்கு கடந்த வாரம் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா ,“நீங்கள் எவ்வளவு காலம் குறை சொல்லி அழுது கொண்டு புலம்புவீர்கள். எவ்வளவு நாட்கள் வீட்டிலேயே இருப்பீர்கள்.அதனை யாராலும் இனி பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மரணத்துக்கு வருந்துகிறேன். இதற்கான தீர்வை விரைவில் கண்டுப்பிடிப்போம்” என்று பதிலளித்திருந்தார்.
உருமாற்றம் அடைந்த கரோனா
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின.
சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.
சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.