ஏமனில் சண்டையிடுவதை நிறுத்துங்கள் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்களிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
சவுதியில் சமீபத்தில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து நெட் பிரைஸ் கூறும்போது, “ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தலைவர்கள், தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு, சவுதி அரசுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவம் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் அடுத்துப் பதவி ஏற்றுள்ள புதிய அரசு இதனைத் தொடர்ந்துள்ளது. அந்த வகையில் ஏமனில், சவுதி ராணுவப் படைகளுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா கடந்த மாதம் தெரிவித்தது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.