பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 5,947 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஜனவரி மாதம் கரோனா பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் மெல்ல தளர்த்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரிட்டனில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை தரப்பில், “பிரிட்டனில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 5,947 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். முந்தைய நாள் கரோனா பாதிப்பு 6,573 ஆக இருந்தது. இதுவரை பிரிட்டனில் 2 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
மாடர்னா, பைஸர், ஜான்சன் & ஜான்சன் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், பைஸர் கரோனா தடுப்பு மருந்து அனைத்து வகை கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பான பலனை அளிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்த நிலையில், உலக நாடுகள் பலவும் பைஸர் கரோனா தடுப்பு மருந்துக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.
உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.