உலகம்

தொடரும் துயரம்: துருக்கியில் படகு கவிழ்ந்து அகதிகள் 14 பேர் பலி

பிடிஐ

துருக்கியின் ஏஜியன் கடல் பகுதியில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இவர்கள் கிரீஸ் நாட்டை அடைய முயற்சி மேற்கொண்டனர். இவர்கள் வந்த படகு கனக்கலே என்ற இடத்திலிருந்து கிரீஸின் லெஸ்பாஸ் தீவு நோக்கி வந்த போது இந்த துயரம் நிகழ்ந்தது.

துருக்கி கடலோரக் காவற்படையைச் சேர்ந்தவர் சடலங்களை மீட்டனர். இதில் மேலும் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக டோகன் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

உயிருடன் மீட்கப்பட்டவர்களில் கர்ப்பவதி ஒருவரும் அடங்குவார். இவரது உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலியானோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஹெலிகாப்டர்கள் படகு கவிழ்ந்த இடத்தில் தேடுதல் பணி மேற்கொண்டு வருகிறது.

துருக்கியில் 22 லட்சம் அகதிகள் உள்ளனர். இவர்களில் பலர் ஐரோப்பாவுக்குள் நுழைய கிரீஸ் வழியைத் தேர்ந்தெடுத்து கடல் பயணத்தின் போது கடும் ஆபத்துகளைச் சந்தித்து பலர் உயிரையும் இழக்கும் துயரம் வாடிக்கையாகி வருகிறது.

SCROLL FOR NEXT