அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி அதிகபட்சமாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி இறுதி முதலே கரோனா பாதிப்பு அமெரிக்காவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்துக்கும் குறைவான கரோனா தொற்று பதிவுச் செய்யப்பட்டு வருகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கு தேவையான கரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு கிடைக்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாகப் பெரும் சவாலாக இருக்கும் கரோனா தொற்றைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன. உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக்-5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே.
இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மட்டுமே ஒரே டோஸாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா, அவசரகாலப் பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.