அமெரிக்காவின் ஓரிகன் பகுதி சாலைகளில் நிஜ வாழ்க்கை ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கார்டியன் ஷீல்ட். இரவு வேளைகளில் நகரமே தூங்கிக்கொண்டிருக்க, ஷீல்ட் மட்டும் நகரப் பாதுகாப்புக்காக தன் வாகனத்தில் கிளம்பிவிடுகிறார். இதற்காக சூப்பர் ஹீரோவுக்கான ஆடைகள், தலைக்கவசம், கையுறை, முகமூடி அணிந்துகொள்கிறார். ‘’இந்தப் பணியை விரும்பிச் செய்கிறேன். அதேநேரம் நான் தான் செய்கிறேன் என்று யாருக்கும் தெரிவிக்க விருப்பம் இல்லை.
அதற்காகத்தான் இந்த சூப்பர் ஹீரோ ஆடைகளை அணிந்துகொள்கிறேன். போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களும் நானும் ஒரே பணியைத்தான் செய்கிறோம். அதாவது குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடுகிறோம். ஆனால் அவர்கள் என்னை ஆதரிப்பதில்லை. என்னுடைய பணிகளை மக்கள் விரும்புகிறார்கள். என் பணியைப் பாராட்டி ரோந்து காரை வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். நான் மக்களுக்காகப் பணி செய்கிறேன். மக்கள் என்னை அங்கீகரிக்கிறார்கள். இதை விட வேறு என்ன வேண்டும்?’’ என்கிறார் ஷீல்ட்.
மக்கள் ஆதரவு இருக்கிற வரை அசத்துங்க ஷீல்ட்!
அமெரிக்காவில் லோவா பகுதியில் வாழ்ந்த வெர்லின் நஃபே தம்பதியருக்கு 1997-ம் ஆண்டு மைக்கேல் என்ற மகன் பிறந்தான். 3 மாதத்தில் குழந்தையை வைத்துப் புகைப்படம் எடுக்க விரும்பினர். அருகில் இருந்த குழந்தைகளையும் சேர்த்து மைக்கேலுடன் புகைப்படம் எடுத்தால் என்ன என்று தோன்றியது வெர்லினுக்கு. உடனே 3 - 6 மாதக் குழந்தைகளை வரவழைத்தனர். வரிசையாகக் குழந்தைகளை வைத்துப் புகைப்படங்கள் எடுத்தனர். 18 வருடங்களுக்குப் பிறகு மைக்கேலுடன் புகைப்படங்கள் எடுத்தவர்களை வைத்து மீண்டும் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் வெர்லின். இத்தனை ஆண்டுகளில் பலரும் பல இடங்களுக்குச் சென்றிருந்தது தெரிய வந்தது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் எல்லோரையும் ஒருநாள் வரவழைத்து விட்டார். லிமோ காருக்கு முன்பாக குழந்தைகளை வைத்துப் புகைப்படங்கள் எடுத்தது போலவே தற்போதும் புகைப்படங்கள் எடுத்துவிட்டார் வெர்லின். இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த நிகழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
அட, நல்லா இருக்கே உங்க ஐடியா!
சீனாவின் ஜினான் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண், தன் அலுவலகத்துக்கு விடுமுறை கேட்டு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் அவர் வேலை செய்த அலுவலகத்தை உலுக்கிவிட்டது. ‘’என் கணவர் லாசா பகுதியில் வசித்து வருகிறார். போக்குவரத்து எளிதாக இருப்பதில்லை என்பதாலும் விடுமுறை கிடைப்பதில்லை என்பதாலும் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை. தற்போது என் கணவரின் முகம் மறந்துவிடும் அளவுக்குச் சென்றுவிட்டேன். 10 நாட்கள் விடுமுறை அளித்தால் கணவரைச் சந்தித்துவிட்டு, திரும்பி விடுவேன். இரண்டு நகரங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து ஆரம்பித்துவிட்டது’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. விடுமுறை அளித்ததோடு, அந்தக் கடிதத்தை இணையதளங்களிலும் வெளியிட்டுவிட்டார்கள்.
பாவம், தொழிலாளர்களை இப்படியா வைத்திருப்பது?