உலகம்

ரஷ்ய விமானம் தீவிரவாத தாக்குதலால்தான் தகர்க்கப்பட்டது

பிடிஐ

கடந்த மாதம் 224 பயணிகளுடன் ரஷ்ய விமானம் வெடித்துச் சிதறியதற்கு, தீவிரவாத தாக்குதலே காரணம் என ரஷ்ய பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, கடும் தண்டனை அளிக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 31-ம் தேதி எகிப்தின் சினாய் அருகே 224 பேருடன் பறந்த ரஷ்யாவின் ஏ 231 விமானம் வெடித்துச் சிதறியது. இதில் 224 பேரும் உயிரிழந்தனர். இது விபத்தா, தீவிரவாத தாக்குதலா என விசாரணை நடந்து வந்தது.

விமானம் வெடித்துச் சிதறியதற்கு தீவிரவாத தாக்குதல் காரணம் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை செயலாளர் அலெக்ஸாண்டர் போர்ட்னிகோவ் கூறும்போது, “எங்கள் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு கிலோ டிஎன்டி வெடிப்பொருளுக்கு இணையான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிப்பொருள் விமானத்தில் இருந்திருக்கிறது. அதுதான் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதற்குக் காரணம். இது தீவிரவாத தாக்குதல்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவர் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். “இதற்கு சட்ட வரையறை எல்லாம் கிடையாது. குற்றவாளிகள் அனைவரின் பெயரும் தெரிய வேண்டும். அவர்கள் பூமியில் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து, தண்டனை அளிப்போம்” என புதின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. ஆனால், கூடுதல் விவரங்கள் எதையும் அளிக்கவில்லை.

இதனிடையே, விமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சுமார் ரூ.330 கோடி பரிசாக அளிக்கப்படும் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT