ஊரடங்கை மேலும் நீட்டிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி ஊடகங்கள் தரப்பில், “ஜெர்மனியில் கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 28ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான மாகாண ஆளுநர்களுடன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் 5,207 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 237 பேர் பலியாகி உள்ளனர்.
ஜெர்மனியில் 24 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,125 பேர் பலியாகி உள்ளனர்.
உருமாறிய கரோனா வைரஸ்
சீனாவைத் தொடர்ந்து, பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், ஜான்சன் & ஜான்சன், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன