அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப், தான் புதிய கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புளோரிடாவில் நடந்த அரசியல் நிகழ்வு ஒன்றில் ட்ரம்ப் பேசும்போது, “நீங்கள் என்னைத் தேடினீர்களா? நான் புதுக் கட்சியைத் தொடங்கப் போவதில்லை. குடியரசுக் கட்சிக்கு மாற்றாக நான் எந்தக் கட்சியையும் தொடங்கப் போவதில்லை. நாம் இன்று கூடியிருப்பது நமது எதிர்காலத்தையும், நமது நாட்டின் எதிர்காலத்தையும், நமது கட்சியின் எதிர்காலத்தையும் பற்றிப் பேசுவதற்குத்தான்.
நவீன வரலாற்றில் எந்தவொரு அதிபரும் பெற்றிராத மிக மோசமான முதல் மாதத்தை ஜோ பைடன் பெற்றுள்ளார். புதிதாகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகம், வேலைவாய்ப்புகளுக்கு எதிரானது, குடும்பங்களுக்கு எதிரானது. அறிவியலுக்கு, பெண்களுக்கு எதிரானது” என்று பேசினார்.
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு, ட்ரம்ப் கலந்துகொள்ளும் முதல் அரசியல் நிகழ்வு இதுவாகும்.
முன்னதாக, அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டம், கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது.