பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா வில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) மாநாட்டுக்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் போ ராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
27-வது ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு மணிலாவில் கடந்த 18-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில், தாராள வர்த்தக ஒப்பந்தம் இடம்பெற்றிருப்பதற்கு பிலிப்பைன்ஸ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒபாமா வருகைக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க அரசின் சின்னமான கழுகு உருவ பொம்மையை எரித்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
‘குப்பையான ஏபிஇசி’, “ஒபாமாவை வரவேற்கவில்லை’ என்பன உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள், மாநாடு நடந்த வளாகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை பாதுகாப்புப் படை யினர் தடுத்ததால் இருதரப்புக் கும் இடையே மோதல் மூண்டது. பாதுகாப்புப் படையினர் தடுப்பு களாலும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
பாரீஸ் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏபிஇசி மாநாட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் போராட்டம் பாதுகாப்பு படையினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் பங்கேற்ற 47 வயதான நெல் விவசாயி நிடா ஃபுளோரெஸ்கா கூறும்போது, “பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிங்னோ அகுய்னோ, ஏழைகளைப் புறக்கணித்து பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டு வருகிறார். அகுய்னோ மக்களை பாதுகாக்க வேண்டும். உலக மயமாக்கல் எங்களது பொருட்களின் விலை சரிவுக்கு வித்திடும். எங்களால், சாகுபடி செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாது” என தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த மோதலால் எவ்வளவு பேர் காயமடைந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 20 ஆயிரத்துக்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.