உலகம்

அமெரிக்கர்கள் கரோனா பலி குறித்து கவலை கொள்ளவில்லை: ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கரோனா பலி 5 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அமெரிக்கர்கள் கரோனாவினால் ஏற்படும் மரணம் குறித்து கவலை கொள்ளவில்லை என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நார்த்வேஸ்டன் பல்கலைகழகம் தலைமையில் நடத்தப்பட்ட புள்ளி விவரத்தின் முடிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நார்த்வேஸ்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் எரிக் நிஸ்பெட் கூறும்போது, “ கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டால் மூன்றில் ஒரு சதவீதம் இறக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கர்கள் நினைத்தனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் இறக்கலாம் என்று அமெரிக்கர்கள் கருதுகின்றனர். மேலும் 10-ல் நான்கு அமெரிக்கர்கள் மட்டுமே கரோனா தடுப்பு மருந்தை கேட்டுக் கொள்ள விரும்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள் ஆனால் கரோனாவினால் ஏற்படும் மரணம் குறித்து கவலைகொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் முதன்முதலில் கரோனா உயிரிழப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்டது. அதன்பின் அடுத்த 4 மாதங்களில் ஒரு லட்சமாக அதிகரித்தது. அதன்பின் செப்டம்பரில் 2 லட்சமாகவும், டிசம்பரில் 3 லட்சமாகவும் உயிரிழப்பு கூடியது. அடுத்த ஒரு மாதத்தில் 3 லட்சமாக இருந்த உயிரிழப்பு 4 லட்சமாகவும், அடுத்த ஒரு மாதத்தில் 5 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம்தான் கரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கியுள்ளன. தடுப்பூசிக்குப் பின் அமெரிக்காவில் உயிரிழப்பு குறையக்கூடும். வரும் ஜூன் 1-ம் தேதி முடிவில் அமெரிக்காவில் 5.89 லட்சம் பேர்வரை உயிரிழக்கக் கூடும் என வாஷிங்டன் பல்கலைக்கழகம் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவில் 2.8 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT