உலகம்

கார்ட்டூன்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஹிஜாப் அணிய வேண்டும்: அலி காமெனியின் ஆணைக்கு வலுக்கும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

கார்ட்டூனில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மதரீதியான ஆணைக்குக் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

அனிமேஷன், கார்ட்டூன்களில் பெண்கள் ஹிஜாப் அணியாததால் ஏற்படும் விளைவைத் தடுப்பதற்காக அதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும், அயத்துல்லா அலி காமெனி ஆணையிட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காமெனியின் இந்த மதரீதியான ஆணைக்கு ஈரானில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

ஈரான் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறும்போது, “இது நிச்சயம் விஷமத்தன்மை கொண்டது. ஈரானின் மூத்த மதத் தலைவர், அனிமேஷன்களில் வரும் பெண் கதாபாத்திரங்களைக் கூட ஹிஜாப் அணியச் சொல்கிறார். இவர்கள் அனிமேஷன்களில் வரும் பெண் தேனீக்களைக் கூட ஹிஜாப் அணியச் சொல்வார்கள். இவர்கள்தான் ஈரானில் அதிகாரத்தில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான பல்வேறு அடக்குமுறைகளை ஈரான் அரசு கடைப்பிடிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அங்குள்ள மகளிர் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இதன் விளைவாக 38 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆடவர் விளையாடும் கால்பந்துப் போட்டியை கடந்த 2019 ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் மைதானத்தில் சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT