உலகம்

தீவிரவாத தாக்குதல் அபாயம்: பெல்ஜியத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

ஏபி

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பெல்ஜியம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாயினர். பெல்ஜியத்தை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாத குழு தாக்குதலை தலைமையேற்று நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

பாரீஸை தொடர்ந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக பெல்ஜியம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்ட னர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில், விமான நிலையங்களில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தலை நகரம் முழுவதும் கவச வாகனங்கள் ரோந்து சுற்றி வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக சுரங்கப் பாதை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் எந்நேரமும் உஷார் நிலையில் இருக்குமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று பிரான்ஸ் சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் ஹொலேந்தேவை சந்தித்துப் பேசிய அவர், ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்களைப் பார்வையிட்டார்.

பாரீஸ் தாக்குதலை நடத்திய 8 தீவிரவாதிகளில் 2 பேர் சிரியாவில் இருந்து அகதிகளாக பாரீஸுக்குள் ஊடுருவியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மற்றொரு தீவிரவாதியும் சிரியாவில் இருந்து அகதியாக வந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT