பாரீஸில் நடக்கும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க உள்ளார். அப்போது பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் 30-ம் தேதி சர்வதேச பருவ நிலை மாநாடு தொடங்க உள்ளது. இதில் உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழல் மாசுப்பாடு அதிகரிப்பு, புவி வெப்பமயமாதல் போன்றவற்றுக்கு வளர்ந்த நாடுகள்தான் காரணம் என்று வளரும் நாடுகள் புகார் கூறி வருகின்றன. ஆனால், இந்தியா, சீனா போன்ற நாடுகளால்தான் புவிவெப்பமயமாதல் அதிகரிக் கிறது என்று அமெரிக்கா உட்பட சில நாடுகள் கூறி வருகின்றனர்.
அதற்கேற்ப, ‘‘பாரீஸ் மாநாடு இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்’’ என்று அமெரிக்க வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந் நிலையில், பருவநிலை மாற்ற மாநாடு தொடங்கும் 30-ம் தேதி பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் ஒபாமா சந்தித்து ஆலோசனை நடத்துவார்.
அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு புவிவெப்பமயமாதலை தடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து மோடியிடம் ஒபாமா ஆலோசனை நடத்துவார் என்ற அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் சந்தித்து ஒபாமா ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்த்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகள்தான் பருவநிலை மாநாட்டில் முக்கிய பங்கு வகிக்கும். கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றும் இந்த நாடு களின் ஒத்துழைப்பை பொறுத்து தான் பாரீஸ் மாநாட்டின் வெற்றி அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார். எனினும், அமெரிக் காவின் இந்த குற்றச்சாட்டை மாநாட்டில் இந்தியா திட்டவட்ட மாக மறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.