ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் உள்ள ஒரு பொழுதுபோக்கு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாயினர். மேலும் 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விடுதியில் நேற்று முன் தினம் இரவு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக நூற்றுக் கணக்கானவர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் 11 மணியளவில் அறையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி உள்ளது. இதை அறிந்ததும் அங்கிருந்த அனைவரும் அலறி யடித்துக்கொண்டு ஓடினர்.
அப்போது பலர் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். இதற்கிடையே தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க போராடினர். மறுபக்கம் மீட்புப் பணியும் நடைபெற்றது.
ஆனாலும், இந்த விபத்தில் 27 பேர் பலியாயினர். மேலும் 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் சிலர் புகை காரணமாக மயங்கி விழுந்தனர். இவர்களில் 25 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிபர் க்ளாஸ் ஐயோஹன்னிஸ் பேஸ்புக் பக்கத் தில், “இந்த விபத்து குறித்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கி றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவி செய்யப்படும்” என்று பதிவிட்டுள் ளார்.
இதுகுறித்து ருமேனியா உள்துறை செயலாளர் ராத் அராபத் கூறும்போது, “இது மிகவும் மோசமான விபத்து. புகாரெஸ்ட் நகரில் இதற்கு முன்பு இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டதில்லை” என்றார்.
இந்த விடுதியில் வெளியேறுவதற்காக ஒரே ஒரு வழி மட்டுமே இருந்ததும் பலி எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.
பிலிப்பைன்ஸில் 15 பேர் பலி
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள ஜம்போங்கா நகரில் உள்ள சந்தையில் நேற்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாயினர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஜோயல் துத்து கூறும்போது, “சந்தையில் உள்ள கட்டிடத்துக்குள் வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் வழக்கம்போல தூங்கிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவே இதற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பல வழிகள் இருந்த போதிலும், ஒரே ஒரு வழி மட்டுமே இரவில் திறந்திருந்ததால், வெளியேறுவதற்கான வழி தெரியாமல் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது” என்றார்.