உலகம்

எல்லையில் கட்டுப்பாடுகள் தேவை; குடிமக்களின் பாதுகாப்பே முக்கியமானது: ஜெர்மனி

செய்திப்பிரிவு

ஜெர்மனியில் கரோனா பரவலைத் தடுக்க தொடர்ந்து கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி அரசுத் தரப்பில், “உருமாற்றம் அடையும் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க எல்லையில் கட்டுப்பாடுகள் அவசியம். இந்த நடவடிக்கைகள் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து, சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனினும் இவற்றை எல்லாம்விட நமது குடிமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் வரை கரோனா பரவல் முடிவுக்கு வராது என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்தார்.

சீனாவைத் தொடர்ந்து, பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT