அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்.
முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் குடியுரிமை சட்டத்தில் கொண்டுவந்த மாற்றம் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். மேலும் வெளி நாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதற்கு ட்ரம்ப் எதிரியாகவே கருதப்பட்டார்.
ட்ரம்ப்பின் இந்த கொள்கை மற்றும் அவரது தீவிர தேசவாத கொள்கை அவருக்கு அமெரிக்க தேர்தலில் தோல்வியை கொடுத்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தேர்தலில் தான் உறுதியளித்தபடி அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். அதன்படி, அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021 வியாழன் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு நாட்டிற்கும் இத்தனை பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. அதேபோல வேலை அடிப்படையில் கிரீன் கார்டு வழங்குவது அறிமுகம் செய்யப்படுகிறது.
இதன்மூலம் அமெரிக்காவில் தொழில் நிமித்தமாக குடியேறியுள்ள ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பயனடைவார்கள்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவும் புதிய மசோதா வழிவகை செய்கிறது.
புதிய குடியுரிமை மசோதாவை இயற்றிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களில் ஒருவரான லிண்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “ இந்த குடியேற்ற சீர்திருத்தம் விரிவான பார்வையை உள்ளடக்கியது. நமது குடும்பங்களை ஒன்றாக வைத்திருக்கலாம், நமது பொருளாதாரத்தை வளர்க்கலாம், தொழிலாளர்களைப் பாதுகாக்கலாம், நமது எல்லைகளை திறம்பட நிர்வகிக்கலாம். புதிய குடியுரிமை மசோதா அதனை செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.